நாடுமுழுவதும் ஜூன் 2021 வரையேனும் அனைத்து வித இடம்பெயர்த்தல் நடவடிக்கைகளுக்கு தடைபோட வேண்டும்.

நகரவாழ் உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்க்கை, வாழ்வாதரம் மற்றும் இருப்பிடத்திற்கான உரிமைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மதித்து நிலைநாட்ட வேண்டும்.

சத்தியவாணிமுத்து நகர், தங்கவேல் தெரு போன்ற சென்னையின் பல இடங்களில் தொடர்ந்து குடியிருப்பு அகற்றம் என்ற பெயரில் உழைக்கும் வர்க்கத்தினரின் மீது நிகழ்த்தப்படும் வன்முறை ஆழ்ந்த வருத்ததையும், கடும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது. முன்னேற்றம், நகர் திட்டமிடுதல் என்ற சாக்கில், ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்டு மற்றும் ஒதுக்கப்பட்டு வரும் சமூகத்தினரை மட்டுமே தாக்கும் இத்தகைய ஈரமற்ற குடியிருப்பு அகற்ற முன்னெடுப்புகள், இவ்வரசாங்க இயந்திரத்தின் சாதிய மற்றும் மேல்தட்டு சார்புநிலையினை வெட்டவெளிச்சமாக்குகின்றன.

சத்தியவாணிமுத்து நகர் குடியிருப்பு அகற்றம்:

சில வாரங்களுக்கு முன், சென்னை நகர அதிகாரிகள் சத்தியவாணி நகரில் கிட்டத்தட்ட 40 வீடுகளை இடித்து பல குடும்பங்களை தெருவிலே தள்ளிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. ஏறக்குறைய 2,100 குடும்பங்கள் வசிக்கும் சத்தியவாணி நகர், நாட்டின் பெரும் நகர்ப்புற குடிசைப்பகுதிகளில் ஒன்று. கடந்த இரண்டு வருடங்களில், 80 சதவிகிதம் குடும்பங்கள், ‘நதி மறுசீரமைப்பு’ திட்டங்களுக்காக, இவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.(ஓம்ஜஸ்வின், டிசம்பர் 2020).

2019 டிசம்பர் மாதத்தின் போதும், கூவம் மறுசீரமைப்புத் திட்டத்திற்காக சென்னை காவல்துறை, குடிசைமாற்று வாரியம் மற்றும் அரசு பொதுப்பணித்துறை போன்ற பல்வேறு துறை அதிகார்கள், திருவல்லிக்கேணியருகே கூவம் ஆற்றின் ஓரமிருந்த 3500 குடியிருப்புகளை அகற்றினர். பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ள பல குடும்பங்களை  ஒரே நாளில் இச்செயல் இருப்பிடமற்றவர்களாக்கியது. இதனால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். (ஜெயராஜன், டிசம்பர் 2019; விசுவநாதன், நவம்பர் 2020). எதற்கும் செவிமடுக்காது அதிகாரிகள் குடியிருப்பு அகற்றம் என்ற வன்முறையை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டு வந்தனர். அரசாங்கத்தின் இவ்வன்முறையை எதிர்த்து, உணவு நீரின்றி கூவ ஆற்றின் கழிவு நீரிலிறங்கியது உட்பட இயன்ற முறைகளில் போராடும் இப்பகுதி மக்களின் மனத்திடத்தை NAPM வணங்குகிறது.

தங்கவேல் தெரு குடியிருப்பு அகற்றம்:

28 டிசம்பர் 2020 அன்று, தங்கவேல் தெருவிற்கு காவல்துறையுடன் வந்த சென்னை மாநகர அதிகாரிகள், அங்கு வசித்துவரும் 77 குடும்பத்தினரை வெளியேறுமாறு மிரட்டினர். பல மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு, ஜனவரி மாதம் (2021) இறுதி வரை கால அவகாசம் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதை சிறிதும் பொருட்படுத்தாது, அதிகாரிகள் 21 குடும்பங்களின் வீடுகளை இடித்துத் தள்ளினர். மேலும், மின் இணைப்பு போன்ற அத்தியாவசியங்களைத் துண்டித்து அப்பகுதி மக்களைத் தொடர்ந்து மிரட்டிவருகின்றனர்.

வெளியேறுமாறு மிரட்டப்படும் தலித் சமூகத்தைச் சேர்ந்த 77 குடும்பங்களும் அப்பகுதியில் 50 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றனர். அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில் 5 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்துவரும் குடும்பங்களுக்கு இலவசமாக பட்டா வழங்கலாம் என்று பல வருடங்களுக்கு முன்னரே தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ள போதிலும், 50 வருடங்களுக்கு மேலாக இங்கு வசித்துவரும் இக்குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை.

முறைகேடான குடியிருப்பு அகற்றத்திலுள்ள சில பிரச்சனைகள்”

  • வாழ்வாதாரம் பாதிப்பு:
  • இப்பகுதியில் வாழும் மக்கள்பலர் தினக்கூலி, மற்றும் வீடுகளில் வேலை புரியும் அமைப்புசாரா தொழிலாளர்கள். ஏற்கனவே, பேரிடர் மற்றும் ஊரடங்கினால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். இந்நிலையில் இதுபோன்ற முறைகேடான வெளியேற்ற முயற்சிகள் அவர்களது வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள கடும்பாதிப்பின் தாக்கத்தை மேலும் அதிகரிக்கும்.
  • மேலும் மீள்குடியிருப்பு வசதி, நகர எல்லைக்கு அப்பாற்பட்டோ, தங்களது இருப்பிடத்திலிருந்து தொலைதூரத்திலோ இருக்கும்பட்சத்தில், தங்களது தினசரி வாழ்க்கை பாதிக்கப்படும் என்று மக்கள் கருதுகின்றனர். இதனால், அப்பகுதியிலேயே பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்வி தடைபடும் வாய்ப்புள்ளது (ஜெயராஜன், டிசம்பர் 2019).  இச்சந்தேகக் குரல், இதற்கு முன் பலமுறை மாற்றுக் குடியமர்வு என்ற பெயரில் நகரத்தை விட்டு, தங்களது பணியிடங்களை விட்டு வெகு தொலைவிற்குத் துரத்தப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் துயர் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டதே.
  • பெரும்பாலும் ஆட்டோ ஓட்டுனர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களான இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாதெனில், அவர்களுக்கு இப்பகுதியிலேயே வீடு கட்டித் தரவேண்டும், அது இயலாதபட்சத்தில், மாற்று குடியிருப்பு இப்பகுதியிலிருந்து 8 கிலோமீட்டருக்குள் இருக்கவேண்டும் என்பதே. (ஓம்ஜஸ்வின், டிசம்பர் 2020).
  • மறு குடியமர்வு மற்றும் மறுசீரமைப்பு குறித்த தெளிவின்மை
  • நவம்பர் 2020 முடிவில்(விசுவநாதன், நவம்பர் 2020), 1750 குடும்பங்கள் மட்டுமே சத்தியவாணி நகரிலிருந்து பெரும்பாக்கத்திலுள்ள தமிழ் நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் குடியமர்த்தப்பட்டனர். மீதமுள்ள 350 குடும்பங்களின் நிலை கேள்விக்குறியாகவேயுள்ளது.
  • சத்தியவாணி நகரில் குடும்பங்கள் இடிக்கப்பட்ட வீடுகளிடையே வாழ்ந்து வருகின்றனர். இச்சூழலிலேயே குழந்தைகள் விளையாடவும் படிக்கவும் செய்கின்றனர் என்று பத்திரிக்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
  • பல குடும்பங்களது அத்தியாவசியங்களான மின் இணைப்பு மற்றும் தண்ணீர் வசதி ஆகியவை துண்டிக்கப்பட்டுள்ளன. (விசுவநாதன், நவம்பர் 2020).

முன்னேற்றம் என்ற போர்வையில் அரங்கேறும் குடியிருப்பு அகற்ற வன்முறை:

சத்தியவாணி நகர், தங்கவேலு தெரு போன்ற நகர்ப்புற குடிசைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்படுவது ஒன்றும் தனித்த நிகழ்வுகள் அல்ல. மாறாக, அவை, நவதாராளக் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளால் கட்டமைக்கப்பட்ட ‘முன்னேற்றத்தை’ தூக்கிப்பிடிக்கும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் அக்கறையின்மையையே அடிப்படையாகக் கொண்டவை. தமிழ் நாடு குடிசை மாற்று வாரியத்தின் அறிக்கைகள் படி, புதிய ‘சூழல்-மறுசீரமைப்பு’ முன்னெடுப்புகளின் கீழ், கிட்டத்தட்ட 60,000 குடும்பங்கள் சென்னையின் ஆற்றங்கரையோரங்களிலிருந்து வெளியேற்றப்பட உள்ளனர். இக்குடும்பங்கள் ‘ஆட்சேபிக்கத்தக்க இடங்களில்’ — அதாவது தாழ் மட்ட, வெள்ள-அபாயம் மிகுந்த பகுதிகள் — வாழ்கின்றனர். அதில் பலர் மாற்றிக் குடியமர்த்தப்பட்டுவிட்டனர்.

உழைக்கும் வர்க்கத்தினருக்கு எதிரான இம்முன்னேற்றக் கட்டமைப்பு தொடர்ந்து பலகோடி மக்களை வளர்ச்சியின் பெயரில் இடம்பெயர்த்தலுக்குள்ளாக்கி துன்புறுத்தி வருகிறது; ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் வலியும் தொடர்ந்து ஒதுக்கப்பட்டே வருகிறது. எந்தவொரு மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டமும் அப்பகுதி மக்களை முன்னிறுத்தி அவர்களின் பங்கெடுப்புடனே இயற்றப்படவேண்டும். 2019இல் தில்லி உயர் நீதிமன்றம் (அஜய் மக்கென் v. இந்திய ஒன்றியம்), ஒருவரது நகரத்திற்கான உரிமை என்பது ‘அவரது இருப்பிடத்திற்கான அடிப்படை உரிமையின் சாராம்சங்களின் விரிவாக்கம் மற்றும் நீட்சியே’ என்று கூறியது. நகரத்திற்கான உரிமை என்பது, ‘அனைத்து நகரவாசிகளுக்கும் ஒரு நகரம் அளிக்கக்கூடிய ஆதாயங்களில் சம பங்கு மற்றும் அந்நகர உருவாக்கத்தில், திட்டமிடுதலில் பங்குபெறுவதற்கான சம உரிமையாகும்’ என்று ஆர்வலர்களும், அறிஞர்களும் கூறுகின்றனர்.

எனவே, ஒரு பகுதியில் வசிக்கும் மக்களின் சம்மதமும் பங்கெடுப்பின்றி செயல்படுத்தப்படும் எந்தவொரு திட்டமும் இவ்வுரிமையை மீறுகிறது. மேலும், குடியிருப்பு மாற்றம் தேவைப்படும் எந்தவொரு திட்டமும் அப்பகுதி மக்களுக்கு பலனளிக்காவிட்டால், அது நகரத்தின் ஆதிக்க வர்க்கத்தினரது ஆதாயத்திற்கான அலங்காரத் திட்டமே. ‘வளர்ச்சி’ மற்றும் ‘சூழலியல் மறுசீரமைப்பு’ திட்டங்கள் விளிம்பு நிலை மக்களை மேலும் ஒடுக்குபவையாக இருப்பது சமத்துவத்திற்கு எதிரானவொன்று.

பொதுநலனுக்காக செய்யப்படும் தியாகம் என்ற பெயரில் பலி கொடுக்கப்படுவதுயேனோ சமூகத்தில் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களாகவே உள்ளனர். இதுவே இந்நாட்டில் மேலோங்கியிருக்கும் வளர்ச்சி குறித்தான கண்ணோட்டத்தின் ஈரமற்றதன்மைக்கான சாட்சி.

இருப்பிடத்திற்கான உரிமை என்பது சர்வதேச அங்கீகாரம் பெற்ற உரிமை. இருப்பிடத்திற்கான உரிமை இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் 21-ஆம் சரத்தின் கீழ் பதியப்பட்டிருக்கும் வாழ்வுரிமையின் ஒரு முக்கிய அங்கம் என்று நீதிமன்றங்கள் பல இடங்களில் ஒப்புக்கொண்டுள்ளன (ஒல்கா டெல்லிஸ் v. பாம்பே மாநகராட்சி (1985) காலத்திலிருந்தே). இந்தியா கையெழுத்திட்டிருக்கும் பல்வேறு சர்வதேச உடன்படிக்கைகள் வலுக்கட்டாயமான இடம்பெயர்த்தலுக்கெதிரான பாதுகாப்புகள் அளிக்கின்றன. இருந்தும், பலர் (பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்தவர்கள்) தங்களது உயிர், உடைமை, பாதுகாப்பு மற்றும் தனிமனித கண்ணியம் குறித்து எந்தவொரு அக்கறையும் இல்லாத அரசினால் தொடர்ந்து இருப்பிடமற்றவர்களாக்கப்படுகின்றனர்.

19 நவம்பர் 2020 அன்று, குடியிருப்பு மற்றும் நிலவுரிமை (HRLN) வெளியிட்ட அறிக்கை, கடந்த மார்ச் 15 – 31 அக்டோபர் 2020 இடையே மட்டும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் நிகழ்த்திய 83 வலுக்கட்டாய வெளியேற்ற நடவடிக்கைகளினால் 54,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறுகிறது. அதுவும், மொத்த நாடும் கோவிட்-19 பேரிடர், ஊரடங்கு மற்றும் வரலாறு காணா பொருளாதார  அழுத்தத்தின் மொத்த பாரம் தாங்காது தவித்துக்கொண்டிருந்த போது.

இதில் பாதிக்கப்பட்ட பலருக்கு, முன் அறிவிப்போ, மீள்குடியேற்ற வசதியோ தரப்படவில்லை. இருப்பிடமற்றவர்களாக்கப்பட்டு, கொரோனா தொற்று பாதிப்பு அபாயம், கடும்குளிர், காற்று மாசு ஆகியவற்றின் தாக்கத்திற்கு தங்கள் உடல்நலன் மற்றும் உயிரை இழக்கும் நிலைக்குத்  தள்ளப்பட்டுள்ளனர். ஆவணப்படுத்தப்பட்ட வெளியேற்றங்களின் காரணங்களாக கட்டமைப்புத் திட்டங்கள், அரசு நிலம் மற்றும் வனப்பகுதி அப்புறப்படுத்துதல், ‘அழகுப்படுத்தும் திட்டங்கள் மற்றும் நீதிமன்ற ஆணை நிறைவேற்றம் ஆகியவை தரப்பட்டுள்ளன. என்ன காரணம் கூறினாலும், இத்தகைய வெளியேற்றங்களை, குறிப்பாக இப்பேரிடர் காலத்தில், நியாயப்படுத்தவியலாது.

நோய்தொற்றுப் பேரிடர் மற்றும் பொருளாதார நெருக்கடியையும் பாராது, வலுக்கட்டாய வெளியேற்றம் மற்றும் இடம்பெயர்த்தல், நிலமின்மை, இருப்பிடமில்லாநிலை, வேளாண் நெருக்கடி, பாலினம்-சார்ந்த வன்முறை, குடிமுறை உரிமைகள் மீதான தாக்குதல் மற்றும் மனித உரிமை போராளிகளின் மீதான அடக்குமுறை என்று அரசு நிகழ்த்திக்கொண்டிருக்கும் மனித உரிமைகளுக்கெதிரான வன்முறை ஒரு பெருங்குற்றம்.

விதிமுறைகளுக்கு உட்படாத, மீள்குடியிருப்பு வசதி மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்திரவாதம் ஏதுமளிக்காது சென்னை சத்தியவாணி முத்துநகர் மற்றும் தங்கவேல் தெரு மக்களின் — பெரும்பாலும் தலித் மக்கள் — மீது நிகழ்த்தப்பட்ட வலுக்கட்டாய வெளியேற்றங்களை மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டணி ((NAPM)) வன்மையாகக் கண்டிக்கிறது.

மின் இணைப்பு போன்ற அத்தியாவசியசேவை துண்டிப்பு உட்பட மாநகர அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் நிகழ்த்தும் வன்முறையினை மனம் தளராது எதிர்கொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் என்றும் உறுதுணையாய் நிற்கிறோம்.

தமிழக அரசு மற்றும் சென்னை மாநகர அதிகாரிகள், பெரும்பாலும் விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த நகர வாழ் உழைக்கும் வர்கத்தினரின் அடிப்படை வாழ்வுரிமைகள் மற்றும் கண்ணியத்தினை மதித்து நிலைநாட்ட வேண்டும்.

இந்திய அரசு நாடுமுழுவதும் ஜூன் 2021 வரையேனும் அனைத்து வித இடம்பெயர்த்தல் நடவடிக்கைகளுக்கும் தடைபோட வேண்டும்.’

அரசாங்கத்தினால் எந்தவொரு வலுக்கட்டாய வெளியேற்றமும் நிகழ்த்தப்படக்கூடாது என்றும், அனைத்து அடிப்படை வசதிகளுடன் கண்ணியமான இருப்பிடத்திற்கான உரிமை அனைவருக்கும் உடனடியாக உறுதிசெய்து தரப்படவேண்டுமென்றும் கோரிக்கை வைக்கின்றோம்.

Sources: 

Nirupama Viswanathan, 350 families reside amid debris of 1,000 houses in Chennai’s Sathyavani Muthu Nagar, The New Indian Express, 16 November 2020, available at: https://www.newindianexpress.com/cities/chennai/2020/nov/16/350-families-reside-amid-debris-of1000-houses-in-chennaissathyavani-muthu-nagar-2223978.html


Omjasvin, MD, Chennai slum dwellers stand neck-deep inside sewage-laden Cooum for hours protesting eviction, The New Indian Express, 9 December 2020, available at: https://www.newindianexpress.com/cities/chennai/2020/dec/09/chennai-slum-dwellers-stand-neck-deep-inside-sewage-laden-cooum-for-hours-protesting-eviction-2233992.html

Sreedevi Jayarajan, ‘Will affect livelihood, education’: Hundreds of families along Chennai’s Cooum evicted, The Newsminute, available at: https://www.thenewsminute.com/article/will-affect-livelihood-education-hundreds-families-along-chennai-s-cooum-evicted-114998

சாதி இந்துக்களின் ஆதாயத்திற்காக தலித் மக்களின் குடியிருப்புகள் அகற்றம், மெய் அறிவு, 29 டிசம்பர் 2020 available at: https://www.meiarivu.com/2020/12/29/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D/

Neelam Cultural Centre, Instagram Page available at:
https://www.instagram.com/neelamcultural/

HRLN, How to respond to forced evictions: a handbook for India, March 2014, available at https://www.hlrn.org.in/documents/Handbook_on_Forced_Evictions.pdf

Contact us at: napmindia@gmail.com

NAPM India