பணியாளர்கள் குறித்த அக்கறையில்லாத, தனது நிர்வாகக் கடமையை முறையாக நிறைவேற்றவியலாத சேலம் மாநகராட்சியை NAPM வண்மையாகக் கண்டிக்கின்றது. மேலும், சுகாதாரப் பணியாளர்களின் சம்பள பாக்கியை உடனடியாக வழங்குமாறு வலியுறுத்துகிறது.

 

சேலம் மாநகராட்சியில் தினமும் சுமார் 500 டன் குப்பைகள் சேகரமாகின்றன. குப்பைத் தொட்டிகளில் சேகரமாகும் குப்பைகளை லாரிகளில் ஏற்றவும், தெருக்களைச் சுத்தப்படுத்தவும், சாக்கடைக் கால்வாய்களில் அடைப்புகளை சரிப்படுத்தவும் 1,050 சுகாதாரப் பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் தவிர, மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தினக்கூலி அடிப்படையில் 1,500 சுகாதாரப் பணியாளர்களும் உள்ளனர்.

அன்றாட வாழ்வை கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு புரட்டிப்போட்டுள்ள இவ்வேளையில், கொண்டலாம்பட்டி, அஸ்தம்பட்டி மண்டலங்களில் பணியாற்றி வரும் சுகாதாரப் பணியாளர்களுக்கு கடந்த 3 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. ஒரு மாத சம்பளம் தாமதம் ஆனபோதே, உரிய தேதியில் ஊதியம் வழங்கிட வேண்டுமென அவர்கள் கோரிக்கை வைத்தும் எந்த பலனுமில்லை.

இதையடுத்து, சுகாதாரப் பணியாளர்கள் திங்களன்று (பிப். 8, 2021) ஒரு நாள் பணி புறக்கணிப்பு செய்ததுடன், சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் பிச்சை எடுக்கும் நூதனப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். முன்னதாக அவர்கள், கையில் மண் கலயம் ஏந்தியபடி கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம் முனபு திரண்டு முழக்கமிட்டனர். பின்னர் அங்கிருந்து மாநகராட்சி மைய அலுவலகம் நோக்கி  ஊர்வலமாக வந்தனர். மாநகராட்சி தங்களது கோரிக்கைகளை ஏற்று நடவடைக்கை எடுக்காவிடில், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தவும் தயாராக இருப்பதாக பணியாளர்கள் கூறுகின்றனர்.

சேலம் மாவட்ட நகராட்சிமாநகராட்சிப் பணியாளர் சங்கம் கீழ்காணும், பிரச்சனைகளை முன்வைக்கின்றது:

1. சம்பளம் முறையாக வழங்கப்படாததால், மூன்று மாத சம்பள பாக்கி உள்ளது.


2. 22 வருட காலமாக பணியிலுள்ள பலருக்குமே பி.எஃப். கணக்குத் தொடங்கப் படவில்லை. மேலும், கடந்த 5 ஆண்டுகளாக பணியாளர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட பி.எஃப். வைப்புநிதி தொகை இன்னும் பணியாளர்களின் பி.எஃப். கணக்குகளில் செலுத்தப்படவில்லை.


3. . கூட்டுறவு சங்கங்களில் பணியாளர்கள் பெற்ற கடனுக்கான தொகை, சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டாலும், அத்தொகை கூட்டுறவுச் சங்கங்களுக்கு செலுத்தப்படாததால், அதற்கும் சேர்த்து வட்டி, அபராதம் செலுத்தப்பட வேண்டிய நிலை உள்ளது.


4.பெண் பணியாளர்களை குப்பை வண்டிகளில் ஏற்றக்கூடாது என்ற நிபந்தனையையும் மீறி அவர்கள் ஏற்றிச் செல்லப்படுகிறார்கள்.

பணியாளர்கள் குறித்த அக்கறையில்லாத, தனது நிர்வாகக் கடமையை முறையாக நிறைவேற்றவியலாத சேலம் மாநகராட்சியை மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டணி (NAPM) வண்மையாகக் கண்டிக்கின்றது. மேலும், சுகாதாரப் பணியாளர்களின் சம்பள பாக்கியை உடனடியாக வழங்குமாறு வலியுறுத்துகிறது.

மேலும், அனைத்து பணியாளர்களுக்கும் பி.எஃப். கணக்கு தொடங்கப்பட்டு, பணியாளர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட பி.எஃப். வைப்புநிதி தொகை முறையாக, உடனடியாக அவர்களது கணக்குகளில் செலுத்தப்படவேண்டும்.

கூட்டுறவு சங்கங்களில் பணியாளர்கள் வாங்கிய கடனுக்காக பிடித்தம் செய்யப்படும் தொகை உடனடியாக கூட்டுறவு சங்கத்திற்கு செலுத்தப்பட வேண்டும். மேலும், இம்முறைகேடினால் கூடிய வட்டி மற்றும் அபராதத் தொகைகள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

பணியாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி விதிக்கப்பட்ட நிபந்தனைகள்  கடைபிடிக்கப் படவேண்டும் என்றும் NAPM வலியுறுத்துகிறது.

For any further details, contact: napmindia@gmail.com

NAPM India